சென்னையின் சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாலை விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூரைச் சேர்ந்த இளைஞரின் இருசக்கர வாகனமும், மற்றொரு நபரின் வாகனமும் விபத்தில் சிக்கிய நிலையில், இதையடுத்து இரு வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தின் போது அந்த இளைஞர் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில், சம்பவ இடத்துக்கு வந்த சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர் பிரபாகரன், அந்த இளைஞரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பாவி மக்கள்மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கிடையிலான மோதலை ‘கட்டப்பஞ்சாயத்து’ செய்ய வந்த சேப்பாக்கம் திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

எந்த அதிகாரமும் நாகரிகமும் இன்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி, பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் காமுகர்கள் வரை அனைவரையும் ஆளுங்கட்சி திமிரூட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா?

பொது மேடையிலேயே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசும் மூத்த தலைவர்கள் உள்ள கட்சி, வளர்ச்சி அரசியலை முன்னெடுக்க முடியாது. ரவுடிகளைத்தான் வளர்க்கும். இத்தகைய கருப்பு–சிவப்பு படையைக் கையில் வைத்துக்கொண்டு ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்’ என்று முழங்குவது வெட்கக்கேடானது. உடனடியாக, அவதூறாக பேசிய வட்டச் செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரை தாக்கிய கார் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.