பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “46 ஆண்டுகளாக ராமதாஸுடன் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக கட்சி தலைவராக செயல்பட்டுள்ளேன்.
என்னை பா.ம.க.வில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்சியில் ஒருவரை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் முழு அதிகாரம் ராமதாஸுக்கே உள்ளது.
அன்புமணி பா.ம.க.வில் தொடர வேண்டும் என்று நினைத்தால், ராமதாஸை நேரில் சந்தித்து பேச வேண்டும். அவர் சேர்த்துக் கொண்டால் தான் கட்சியில் இருக்க முடியும். அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான். அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்தது யார் என்பதையும் அவர் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு குறைந்தபட்சமான மனசாட்சியாவது இருக்க வேண்டாமா?
பா.ம.க. என்ற ஆலமரம் ராமதாஸ்தான். தற்போது அவரது கை ஓங்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.
மேலும், கூட்டணி விவகாரம் குறித்து பேசிய ஜி.கே.மணி, எந்த அரசியல் கட்சியுடனும் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி குறித்து விரைவில் ராமதாஸ் நல்ல செய்தியை அறிவிப்பார்” என தெரிவித்தார்.
