கள்ளக்குறிச்சியில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி விடுத்த விவாத சவாலுக்கு அமைச்சர் ரகுபதி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாமல், வெளிநடப்பு செய்து புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச் என்ற பீலா எதற்கு?” என அவர் காரசாரமாக வினவியுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியதாகப் பெருமை பேசும் ஈபிஎஸ், அதற்கான நிர்வாகக் கட்டடங்களைக் கட்டாமல் தற்காலிக இடத்திலேயே விட்டுச் சென்றதையும், திமுக ஆட்சியில் தான் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டதையும் அவர் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறும் ஈபிஎஸ்-க்கு, 2015 சென்னை வெள்ளத்தின் போது தன்னார்வலர்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களில் கூட ஜெயலலிதா படம் ஒட்டியதை அமைச்சர் ரகுபதி நினைவுபடுத்தியுள்ளார்.

“20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை விமர்சிக்கும் நீங்கள், உங்கள் ஆட்சியில் 2019-க்குப் பிறகு அந்தத் திட்டத்தை ஏன் முடக்கினீர்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வரை அதிமுக ஆட்சியில் நடந்த கறுப்புப் பக்கங்களைப் பட்டியலிட்ட அவர், எதற்கும் துணிவிருந்தால் சட்டமன்றத்தில் நேருக்கு நேர் மோத வருமாறு எடப்பாடி பழனிசாமிக்குச் சவால் விடுத்துள்ளார்.