கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இரவு பிரியாணி சாப்பிட்டு விட்டு, நள்ளிரவில் தர்பூசணி பழம் சாப்பிட்டதால் தான் இந்த மரணங்கள் நிகழ்ந்தன என்ற வதந்தி பரவி, மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டோகடியா குடும்பத்தினரின் மரணத்திற்குப் பிறகு தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார், அவர்களது வீட்டிலிருந்த பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் தடயங்களைச் சேகரித்து தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அவர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட உப்பின் மாதிரிகளில் ‘ஜிங்க் பாஸ்பைடு’ (Zinc Phosphide – எலி விஷம் தயாரிக்கப் பயன்படும் வேதிப்பொருள்) கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தின் மீது இந்த நச்சு கலந்த உப்பு தடவப்பட்டிருக்கலாம் என போலீஸார்  சந்தேகிக்கின்றனர்.

மேலும், உயிரிழந்த நான்கு பேரின் உடற்கூறாய்வு அறிக்கையிலும், அவர்கள் உடலில் ‘ஜிங்க் பாஸ்பைடு’ நச்சு கலந்திருந்ததை மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், டோகடியா குடும்பத்தின் வீட்டில் வேறு எங்குமே இந்த ஜிங்க் பாஸ்பைடு பாக்கெட் கண்டறியப்படாததால், இந்த விஷம் வீட்டிற்குள் எப்படி வந்தது, இதன் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் பயதுனி பகுதியில் வசித்து வந்த டோகடியா குடும்பத்தினர், தங்களது உறவினர்களுடன் இணைந்து பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பிறகு உறவினர்கள் கிளம்பிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 முதல் 1.30 மணியளவில் குடும்பத்தினர் நால்வரும் தர்பூசணி பழத்தை வெட்டிச் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே, அதாவது ஏப்ரல் 26 அதிகாலை 5.30 மணியளவில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடுமையான வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சில மணி நேர இடைவெளியில் நான்கு பேரும் துடிதுடித்து உயிரிழந்தனர்.  ஒரே நாளில் ஒரு குடும்பமே மொத்தமாக அழிந்தது மும்பையையே உலுக்கியது. இந்த வழக்கில் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, உயிரிழந்தவர்களின் மூளை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் மாதிரிகளை ஆய்வு செய்த ‘ஹிஸ்டோபெத்தாலஜி’ (Histopathology) அறிக்கையில், அந்த உறுப்புகள் யாவும் பச்சை நிறமாக மாறியிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதன் மூலம் அவர்கள் உடலில் கொடூரமான விஷம் ஏறியிருப்பது உறுதியானது. இந்த விஷம் திட்டமிட்டு உணவில் கலக்கப்பட்டதா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்ற கோணத்தில் மும்பை போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.