தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விஜய்க்கு ‘BNSS 179’ பிரிவின் கீழ் இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக அவர் நாளை (ஜன. 12) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். ‘BNSS 179’ பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால், அவர் குற்றம் செய்தவர் இல்லை என்றும், நடந்த சம்பவம் குறித்து அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று டெல்லி புறப்பட்ட நிலையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என போலிஸ் தரப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் விசாரணை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சாரம் கரூரில் நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தும் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது நடிகர் விஜய்க்கு மற்றொரு சிக்கலாக பார்க்கப்படுகிறது.
