ஏமனில் பணியாற்றிய கேரளவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது, தொழில் கூட்டாளியான ஏமனியரை 2017-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குத்தண்டனை ஜூலை 16, 2025 ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் அரசு அறிவித்தது.

இந்திய அரசு, நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. ஆனால், அந்த முயற்சிகளில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், ஏமனில் இந்திய தூதரகம் இல்லாததாலும், அந்நாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் மிகவும் வரையறுக்கப்பட்டவையாக உள்ளன என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் தலையீடு செய்ததன் பேரில், நிமிஷா உயிர் பிழைப்பாரா என்ற நம்பிக்கை மீண்டும் எழுந்துள்ளது. கிராண்ட் முஃப்தியின் வேண்டுகோளை அடுத்து, ஏமனில் பிரபல சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர் தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

ஏமன் சட்டத்தின் அடிப்படையில், கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பம் ரத்தப்பணத்தை (blood money) ஏற்க தயாராக இருந்தால், தூக்குத்தண்டனையை தவிர்க்கலாம். ஆனால் தற்போது அந்த குடும்பம் அதை ஏற்க மறுத்து வருகின்றது. இதனால் பேச்சுவார்த்தை சிக்கலாக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மூலம் இந்த பேச்சுவார்த்தை தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கை கொடுக்காத நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவர் அபூபக்கர் முப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டம் கொல்லெங்கோட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2008-ஆம் ஆண்டு ஏமனில் செவிலியராக பணியாற்ற சென்றார். 2017-ல் நடந்த சம்பவத்தில், தொழில் சம்பந்தமான பிரச்சனை காரணமாக, ஏமனியரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.