ஒரு திருமண விழாவில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், அதன் காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகனுக்குச் சில பெண்கள் வழங்கிய ‘விசித்திரமான பரிசு’ இணைய பயனர்களை வேதனைப்படுத்தியதோடு, சோகம் நிறைந்த நிகழ்வை கேலி செய்துள்ளதாகக் கண்டனம் எழுந்துள்ளது.
தற்போது வைரலாகும் இந்த வீடியோவில், மணமகன் மற்றும் மணமகள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்குப் பின்னால், கருப்பு கண்ணாடி அணிந்த பெண்கள், ஒரே மாதிரியான புன்னகையுடன் நிற்பது காணப்படுகிறது. கீழே மேடையில், அவர்கள் மணமகனுக்கு பரிசாக வழங்கிய ‘நீல நிற பிளாஸ்டிக் டிரம்’ மற்றும் சிமெண்ட் மூட்டை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி, பார்த்தவுடன் சிரிப்பைத் தரும் வகையிலும், பின்னணி உண்மையை அறிந்தவுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்த டிரம் சாதாரணமானதல்ல. இது, மார்ச் 2025-ல் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ந்த ஒரு பயங்கர கொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. சௌரப் ராஜ்புத் என்ற இளைஞர், அவரது மனைவியால் மற்றும் காதலரால் கொல்லப்பட்டார். கொலை செய்த பிறகு, அவரது உடல் துண்டுகள் அதே மாதிரியான நீல டிரம்களில் அடைக்கப்பட்டு, சிமெண்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
View this post on Instagram
இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் பின்னர் ‘நீல டிரம்’ ஒரு நகைச்சுவை பிம்பமாக சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், ரீல்கள் என பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது அதை ஒரு திருமண விழாவில் ‘பரிசு’ என வழங்கியுள்ளதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
இந்த வீடியோ, @bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இணையத்தில் கோபம், பதட்டம், வருத்தம் ஆகியவை எழுந்துள்ளன.
ஒரு பயனர், “இது என்ன அபத்தமான வழி? ஒரு மனிதன் கொல்லப்பட்ட சம்பவத்தை இப்படி கேலி செய்வது ஏற்க முடியாதது!” என எழுதினார். மற்றொரு பயனர், “இதை ஒரு மகனும், தந்தையும் பார்த்தால் என்ன மனநிலை இருக்கும்?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த வீடியோ இதுவரை லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளதுடன், பலர் இதுபோன்ற அமர்தூரமான மீம்ஸ்களை எச்சரிக்கையாக அணுக வேண்டியதாக்கும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
