மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பார்கி அணையில் நிகழ்ந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் உருக்கமான புகைப்படம் போலியானது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி சுமார் 40 சுற்றுலாப் பயணிகள் பார்கி அணைக்குச் சென்றுள்ளனர். மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்பட்ட படகில் அவர்கள் சென்றபோது, திடீரென பலத்த காற்று வீசியதால் படகு நிலைதடுமாறிக் கவிழ்ந்தது.
இதில் பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் நீரில் மூழ்கினர். மீட்புக் குழுவினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் படத்தில், விபத்தில் சிக்கிய தந்தை ஒருவர் தனது மகனைக் காப்பாற்ற, அவனை இறுகக் கட்டியணைத்தபடி உயிர்காக்கும் கவசத்துடன் இருப்பது போன்ற காட்சி உள்ளது. இதைப் பார்த்த பலரும், “பேரிடரின் அடையாளம்” எனக் கூறி வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தப் புகைப்படம் குறித்து ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் அதிரடி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பார்கி அணை விபத்திற்கும், சமூக வலைதளங்களில் பரவும் இந்தப் புகைப்படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது வேறு எங்கோ எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம். பொதுமக்கள் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
