உத்தரப் பிரதேச மாநிலம் கோத்வாலி பகுதியில் கடந்த 24-ஆம் தேதி தனது வருங்கால கணவருடன் சென்ற பெண்ணைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், அந்த கொடூரத்தை நேரில் பார்த்த 58 வயது விவசாயி அளித்த சாட்சியம் பெரும் பரபரப்பை அதாவது சம்பவம் நடந்த அன்று அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த 58 வயது விவசாயி, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்றுள்ளார். அவர் நேரில் பார்த்த காட்சிகளைப் பற்றி கூறுகையில்,
நான் அங்கு சென்றபோது, மூன்று பேர் அந்த இளைஞனை அடித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் அரை நிர்வாண நிலையில் அழுதுகொண்டிருந்தார். அந்த இளைஞன் அழுதுகொண்டே, ‘உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், எங்களை விட்டுவிடுங்கள்’ என மர்ம நபர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
விவசாயி தலையிட்டு அவர்களை விடுவிக்குமாறு கேட்டபோது, “நாங்கள் அவர்களை விட்டுவிடுகிறோம், நீங்கள் கிளம்புங்கள்” என அந்த கும்பல் நயவஞ்சகமாகப் பேசியுள்ளது. அதனை நம்பி விவசாயி அங்கிருந்து சென்ற நிலையில், அந்த கும்பல் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட இளைஞர் காவல்துறையிடம் மூன்று பேர் என்று கூறியதால், ஆரம்பத்தில் போலீசார் இந்த விவசாயியையும் மூன்றாவது குற்றவாளியாகக் கருதி விசாரணை நடத்தினர். பின்னர், பாதிக்கப்பட்டவர்களே இவர் குற்றவாளி அல்ல, உதவிக்கு வந்தவர் என்று உறுதிப்படுத்திய பின்னரே குழப்பம் நீங்கியது. சம்பவம் நடந்த இடம் குறித்து அந்த விவசாயி ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒதுக்குப்புறமான பகுதி நீண்ட நாட்களாக சமூக விரோத செயல்களின் கூடாரமாக உள்ளது. இது குறித்து ஓராண்டுக்கு முன்பே நான் ‘டயல் 112’ மூலம் புகார் அளித்தேன். ஆனால் போலீஸார், ‘உனக்கு என்ன வந்தது? உனக்கு என்ன பிரச்சினை?’ எனக்கூறி என்னை அலட்சியப்படுத்தினர். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தும், போலீஸார் முறையான ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் நடந்த அடுத்த நாளே காவல் நிலையம் சென்று அந்த விவசாயி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு முதியவரின் புகாரை அலட்சியப்படுத்தியதால், இன்று ஒரு பெண்ணின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
