மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் போர் தாலுகாவிற்கு உட்பட்ட நரசாபூர் பகுதியில், 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்த 65 வயது முதியவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இன்று நரசாபூர் பகுதி முழுவதும் கடையடைப்புப் போராட்டத்தால் ஸ்தம்பித்துள்ளது.
பூசாரியின் மகளான அந்த 4 வயது சிறுமி, கோடை விடுமுறைக்காக நரசாபூரில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நயமாகப் பேசி அருகில் இருந்த மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பிஞ்சு குழந்தையைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
குற்றம் அம்பலமாகிவிடும் என்ற பயத்தில், அந்த முதியவர் சிறுமியின் தலையில் கல்லால் அடித்துச் சிதைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காகச் சிறுமியின் சடலத்தைச் சாணக் குவியலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
விளையாடச் சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடியுள்ளனர். அப்போது மாட்டுத் தொழுவத்தில் சிறுமி சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த முதியவர் சிறுமியைத் தொழுவத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அந்த நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில தினக் கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில், இத்தகைய கொடூரச் செயல் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று நரசாபூர் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்கு போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
