மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்குச் சாதகமாக உள்ளதால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 இடங்களுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் Matrize மற்றும் ‘டுடே சாணக்யா’ போன்ற முன்னணி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள், பாஜக 145 முதல் 175 இடங்களைக் கைப்பற்றி முதன்முறையாக வங்கத்தில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன. அதே சமயம், மம்தா பானர்ஜி 177 இடங்கள் வரை பெற்று மீண்டும் ஆட்சியமைப்பார் எனச் சில கணிப்புகள் கூறி வருவதால், அங்கு இழுபறி நிலவும் சூழலும் உள்ளது.
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் குறித்த கவலை அண்டை நாடான வங்கதேசத்திலும் எதிரொலித்துள்ளது. வங்கதேச நாடாளுமன்றத்தில் பேசிய ரங்பூர் தொகுதி எம்.பி. அக்தர் ஹுசைன் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் ஊடுருவல்காரர்கள் என்ற பெயரில் வங்கதேசத்தவர்கள் வெளியேற்றப்படலாம்; இது எங்களுக்குப் பெரும் அகதிச் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தனது கவலையைத் தெரிவித்தார்.
बंगलादेश के सांसद अख़्तर हुसैन ने आज बांग्लादेश के संसद में कहा कि भाजपा की पश्चिम बंगाल की जीत घुसपैठ को रोकेगी और बांग्लादेशी मुसलमानों को भगाएगी,यह ख़तरनाक है । तृणमूल कांग्रेस के मददगार धीरे-धीरे सामने आ रहे हैं pic.twitter.com/wt1ZZUK7Un
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) April 30, 2026
வங்கதேச எம்.பி.யின் இந்தப் பேச்சை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே, “திரிணமூல் காங்கிரஸின் உண்மையான ஆதரவாளர்கள் யார் என்பது இப்போது மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது. ஊடுருவலைத் தடுப்போம் என பாஜக கூறுவது இவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, பாஜக ஆட்சியமைந்ததும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்தச் சூழலில் மே 4-ஆம் தேதி வெளிவரும் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் மட்டுமல்லாது, அண்டை நாட்டு உறவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
