தாய் என்பவள் அன்பின் வடிவம் மட்டுமல்ல, தியாகத்தின் சின்னமும் கூட என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி, தலையில் கனமான சுமையை ஏற்றிப் படிக்கட்டுகளில் ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகில் சைனி என்பவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு ஏழைத் தாய் தனது இடுப்பில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு, அதே சமயம் தலையில் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்தபடி படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறார். கழுத்தில் நரம்புகள் புடைக்க, மூச்சுத் திணற அந்தப் பெண் படியேறும் காட்சி பார்ப்பவர் எவரையும் கலங்கச் செய்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு தாயின் வலிமை கற்பனைக்கும் அப்பாற்பட்டது. தனது குழந்தையின் பசியைப் போக்க எந்த எல்லைக்கும் செல்வாள் எனப் பலர் புகழாரம் சூட்டியுள்ளனர். இதை வீரமாகப் பார்க்கக் கூடாது. இது அந்தத் தாயின் உயிருக்கும், குழந்தையின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல். ஒரு சமூகம் என்ற முறையில் நாம் தோல்வியடைந்துவிட்டோம் எனச் சிலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று பேசிக்கொள்கிறோம், ஆனால் ஒரு தாய் தன் குழந்தையைச் சுமந்து கொண்டு இப்படி வேலை செய்யும் நிலைதான் இன்னும் நீடிக்கிறது எனப் பொருளாதார வளர்ச்சி குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற ‘ஹிர்கானி’ (தன் குழந்தைக்காக நள்ளிரவில் செங்குத்தான கோட்டையிலிருந்து கீழே இறங்கிய தாய்) கதையைப் போல, இந்தத் தாயும் தனது வாழ்வாதாரத்திற்காகப் போராடுவதாகப் பதிவிட்டு வருகின்றனர். உழைக்கும் பெண்களின் பாதுகாப்பும், அவர்களது குழந்தைகளின் பராமரிப்பும் இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.