நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழக காங்கிரஸ் எம்.பி-க்களான ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பிரதமருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு சம்பவத்தைத் திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த அதிரடிப் புகார் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சபாநாயகரின் இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அபத்தமானது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்ததோடு, பாஜக எம்.பி-க்கள் முன்னாள் பிரதமர்களை இழிவாகப் பேசியதைக் கண்டித்துத் தான் தாங்கள் போராடியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் என்பது பாஜகவின் கட்சி அலுவலகம் அல்ல என்றும், எதிர்க்கட்சியினரின் உரிமையை நிலைநாட்டவே தாங்கள் போராடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எப்ஸ்டீன் பைல் விவகாரம் மற்றும் சீனா தொடர்பான பிரச்சினைகளில் பிரதமருக்கு இருக்கும் பயத்தை மறைக்கவே, சபாநாயகர் மூலம் பெண் எம்.பி-க்கள் மீது இத்தகைய பழிச்சொற்கள் வீசப்படுவதாக ஜோதிமணி சாடியுள்ளார்.

தாங்கள் வன்முறையை நம்புபவர்கள் அல்ல என்றும், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் ‘வீர மங்கைகள்’ என்றும் அவர் கூறியுள்ளார். சபாநாயகரின் பொய்க் கதைகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.