சென்னை அருகே செயல்பட்டு வந்த ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மாதம் ஒருமுறை நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலர்கள் அந்த காப்பகத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் சில சிறுமிகள், “நாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறோம்” என்று நேரடியாக புகார் கூறியதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அந்த புகாரை தொடர்ந்து அலுவலர்கள் தீவிரமாக விசாரித்ததில், மொத்தம் 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சென்னை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, காப்பக உரிமையாளர், அவரது மகள், மற்றும் கார் ஓட்டுநர்  என மூவரையும் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் போது, காப்பக உரிமையாளர் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகள் மற்றும் கார் ஓட்டுநர்  மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாதுகாப்புக்காக வேறு வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் அந்த காப்பகத்தை எழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விரைவாகப் பதிலளித்து, துணைரீதியான விரிவான விசாரணை நடத்த உத்தரவு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.