வடகொரியாவின் கடுமையான அடக்குமுறையிலிருந்து தப்பித்து, ஒன்பது பேர் கொண்ட ஒரு குடும்பம் தென்கொரியாவிற்கு மேற்கொண்ட துணிச்சலான பயணம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிம் இ-ஹியோக் என்பவரின் தலைமையில், ஒரு தசாப்த கால திட்டமிடலுக்குப் பிறகு இந்த குடும்பம் தப்பிக்கும் முயற்சியில் இறங்கியது.
மேலும் கடலோரக் காவல் படையினரின் நம்பிக்கையைப் பெற பல ஆண்டுகள் மீனவர்களாக நடித்த இவர்கள், கடந்த 2023 மே மாதம் ஒரு புயல் வீசும் இரவில் தங்கள் ஆபத்தான பயணத்தைத் தொடங்கினர். கண்காணிப்பு அதிகாரிகளின் காதுகளில் சத்தம் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, நான்கு மற்றும் ஆறு வயது சிறுவர்களை மூட்டைகளில் மறைத்து வைத்து, வெடிகுண்டுகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து உயிர் பணயம் வைத்து அவர்கள் முன்னேறினர்.
இந்த குடும்பத்தில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்குவார் என்பது தப்பிக்கும் பயணத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. வடகொரியக் கடலோரக் காவல்படையின் பார்வையில் இருந்து தப்பி, கடுமையான அலைகளுக்கிடையே தென்கொரிய எல்லைக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த கடற்படையினர் இவர்களை மீட்டனர். “நாங்கள் எஞ்சினை சரிசெய்ய வரவில்லை, சுதந்திரத்தைத் தேடி வந்திருக்கிறோம்” என்று அவர்கள் கூறிய வார்த்தைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தென்கொரியா அவர்களை அன்புடன் வரவேற்றாலும், இந்த சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் ஒரு சோகமும் நிலவுகிறது. இந்த தப்பிக்கும் திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்காற்றிய கிம்-மின் தம்பி, தென்கொரியா வந்து சேர்ந்த 19 நாட்களில் ஒரு விபத்தில் உயிரிழந்தது இந்த வெற்றிப் பயணத்தில் தீராத வடுவாக மாறியுள்ளது.
