அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தாமதமானாலும், இந்த போர்நிறுத்த நீட்டிப்பு வளைகுடா பிராந்தியத்தில் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை தொடரும் என்பதால், பதற்றம் முழுமையாகத் தணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளது சர்வதேச அரங்கில் அதன் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. இது இந்தியாவுக்கு ஒரு ராஜதந்திர சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவின் 60% எரிசக்தித் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதால், அங்கு நிலவும் ஸ்திரமற்ற நிலை இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்.
இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமரசம் செய்பவராக அங்கீகாரம் பெறுவது, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்க நிலைக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.
