அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் அந்நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேற விரும்புவதாக கார்னகி சர்வதேச அமைதி அறக்கட்டளையின் அண்மைய ஆய்வு முடிவுகள் அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில் ‘அமெரிக்கக் கனவு’ என்பது இந்தியர்களின் பெரும் இலட்சியமாக இருந்த நிலையில், தற்போது 10-ல் 4 இந்தியர்கள் வெளியேறத் துடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கியக் காரணமாக அந்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நிலவும் தீவிர அரசியல் துருவமுனைப்பு ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, 58 சதவீத இந்தியர்கள் அரசியல் சூழலால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மை குறைந்து வருவதால் தங்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், அமெரிக்காவின் சிக்கலான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் கிரீன் கார்டு பெறுவதில் நிலவும் பல தசாப்த காலக் காத்திருப்பு இந்தியர்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட திறமையான இந்தியத் தொழிலாளர்கள் நிரந்தரக் குடியுரிமைக்காக 30 முதல் 40 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது சில பிரிவுகளில் இது 70 ஆண்டுகள் வரை கூட நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தகைய முட்டுக்கட்டைகளால் எச்-1பி விசா நடைமுறைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும், குடும்பத்துடன் நிம்மதியாக வாழ முடியாத சூழலும் பலரை கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை நோக்கித் திரும்பச் செய்துள்ளது. அமெரிக்க மக்கள்தொகையில் வெறும் 1.5 சதவீதமாக இருந்தாலும், அந்நாட்டின் வரி வருவாயில் 6 சதவீதத்தை வழங்கும் இந்தியச் சமூகம் இன்று அந்நியமாக உணரத் தொடங்கியுள்ளது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படையாகிறது.