இரவு நேரத்தில் சாலையில் போலீஸாரைப் பார்த்தாலே வாகன ஓட்டிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது சோதனையும், அபராதமும்தான். ஆனால், பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் அந்த எண்ணத்தையே மாற்றியுள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை போலீஸார் சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். அப்போது அவரது ஜாக்கெட்டுக்குள் ஒரு குட்டி நாய் இருப்பதை பார்த்த போலீஸார், அபராதம் விதிப்பதை விட அந்த குட்டி நாயிடம் அன்பாக நடந்து கொண்டுள்ளனர். இந்த அழகான காட்சியை பதிவு செய்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் விடியோவில், ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் பயணம் செய்வது தெரிகிறது. அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் பாதுகாப்பாக ஒரு குட்டி நாயை வைத்திருந்தார். அந்த குட்டி நாய் ஜாக்கெட்டுக்கு வெளியே தலையை மட்டும் நீட்டியபடி பயணத்தை ரசித்துக் கொண்டிருந்தது. இதை கவனித்த பாட்னா போலீஸார், அந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஜாக்கெட்டுக்குள் இருந்த குட்டி நாயை பார்த்ததும், போலீஸாரின் கவனம் முழுவதும் அதன் மீதே சென்றுள்ளது.
A biker in Bihar’s Patna was stopped by traffic police after they spotted a tiny puppy tucked inside his jacket. Expecting a challan, the rider stopped, but an officer gently petted the puppy and asked if it was okay😂 pic.twitter.com/uE1UUsZ2hi
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 7, 2026
பொதுவாக சாலை சோதனையின்போது ஆவணங்கள், ஹெல்மெட் உள்ளிட்டவற்றை போலீஸார் பரிசோதிப்பது வழக்கம். ஆனால், இந்த சம்பவத்தில் குட்டி நாயை பார்த்த போலீஸார் அதனிடம் அன்பாக கொஞ்சி மகிழ்ந்துள்ளனர். போலீஸாரின் இந்த எதிர்பாராத அணுகுமுறை அங்கிருந்தவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
போலீஸார் என்றாலே கண்டிப்பு, சோதனை, அபராதம் என்ற எண்ணத்திற்கு மாறாக, இந்த சம்பவத்தில் அவர்களின் மனிதநேயமும் விலங்குகள் மீதான அன்பும் வெளிப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் போலீஸாரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். “சலான் இல்லை… பாசம் மட்டும்தான்!” என பலர் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிறிய குட்டி நாய் காரணமாக ஏற்பட்ட இந்த அழகான சந்திப்பு, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் புன்னகைக்க வைத்துள்ளது.
