மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடந்த மார்ச் 24 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் தொலைபேசியில் ஆலோனை நடத்தினர். இந்த உரையாடலின் போது உலகப் பணக்காரர் எலான் மஸ்க் உடனிருந்ததாக அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மிக ரகசியமான மற்றும் முக்கியமான உரையாடலில், அரசு பதவியில் இல்லாத ஒரு வெளிநபர் பங்கேற்றது முறையற்றது என அந்த செய்தியில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான அந்த முக்கியமான பேச்சுவார்த்தையில் மூன்றாவது நபர் யாரும் பங்கேற்கவில்லை என்றும், நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் எலான் மஸ்க் குறித்த வதந்திகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
