தவெக அரசு தனது முதலாவது பொது நிதிநிலை அறிக்கையை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் உரையின் தொடக்கமாகப் பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வாசித்தார். நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு மொத்தம் ரூ.44,527 கோடி நிதியைத் தவெக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், இந்த நிதி ஒதுக்கீடு குறித்துத் தி.மு.க.வின் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

முந்தைய தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியில், தலைவர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறைக்குச் செய்யப்படும் முதலீடுகள் எப்போதுமே ஏறுமுகமாகவே இருந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட, தற்போது தவெக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்ற முழக்கத்திற்கு இணங்க, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெருமை தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை என்பதைத் தவெக அரசு மறந்துவிடக் கூடாது என அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

“>

 

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த இந்த விவாதம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.