அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் அமெரிக்கப் படைத்தளங்களைத் தாக்கியதுடன், ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது டிரம்ப் அறிவித்த போர்நிறுத்தம் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், தன்னை உலகம் ஒரு சிறந்த அமைதித் தூதுவராக நினைவில் கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
தான் பல போர்களை நிறுத்தி மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகவும், அமைதியை விரும்புவதே தனது வாழ்நாள் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார். உரையின் போது, தவறுதலாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ என்பதற்குப் பதிலாக ‘டிரம்ப் ஜலசந்தி’ என்று அவர் கூறியது அங்கிருந்தவர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நோபல் பரிசு குறித்துப் பேசிய டிரம்ப், தமக்கு அந்தப் பரிசு கிடைக்காதது குறித்து அதிருப்தி வெளியிட்டார். கடந்த 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா, அந்தப் பரிசை டிரம்ப்புக்கே வழங்க விரும்புவதாகக் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். போர்களைத் தடுத்து நிறுத்தியதற்காகத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை டிரம்ப் இந்த மாநாட்டிலும் மீண்டும் வலியுறுத்தினார்.
