நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர் போராட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக சாடியுள்ளன. தேர்வுத்தாள் கசிவுப் புகார்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) நடத்திய போராட்டத்தில், மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி அவர்களே, தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை விடுத்து, நள்ளிரவில் ஒரு வீடியோவை வெளியிட்டு மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காதீர்கள். உடனடியாக கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்குங்கள்; போராடிய மாணவர்களை தாக்கியவர்களைத் தண்டியுங்கள்; மாணவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்” என அதிரடியாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதேபோல், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமருக்கு விடுத்துள்ள சவாலில், நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது, பிரதமர் தனது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, நள்ளிரவில் ஒருதலைப்பட்சமாக ‘மன் கி பாத்’ பாணியில் வீடியோ வெளியிடக் கூடாது என்று அவர் சாடியுள்ளார். மேலும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோரும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குத் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும், கல்வி அமைச்சரின் ராஜினாமாவே அரசின் பொறுப்புக்கூறலுக்கு முதல் படியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் இந்த கடுமையான விமர்சனங்களுக்கு முன்னதாக, வியாழக்கிழமை நள்ளிரவில் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, தேர்வுத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான நடடிவக்கைகளை உள்ளடக்கிய புதிய மசோதா, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த மசோதாவின் அம்சங்கள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தி 26 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
