மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில், பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கடந்த சில நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
பிப்ரவரி 14-ஆம் தேதி காலை சுமார் 10:30 மணியளவில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த மாணவியைத் தனியாக அழைத்துள்ளார். அச்சமடைந்த மாணவி தனது தோழிகள் மூவருடன் ஆசிரியரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
மாணவியுடன் வந்த மற்ற மூன்று தோழிகளையும் வகுப்பறைக்குத் திருப்பி அனுப்பிய ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியை மட்டும் தனியாக நிறுத்தியுள்ளார். அப்போது அவர் மாணவியிடம், “கடந்த நான்கு நாட்களாக உன்னை அழைத்து வருகிறேன், நீ ஏன் வரவில்லை? நள்ளிரவு 3 மணி வரை வாட்ஸ்அப்பில் அதாவது ஆன்லைனில் ஏன் இருக்கிறாய்? நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறி, மாணவியின் கையைப் பிடித்து அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடமிருந்து கையை விடுவித்துக்கொண்டு வகுப்பறைக்கு ஓடிச் சென்றார். பின்னர் இச்சம்பவம் குறித்து தனது தோழிகளிடமும், பெற்றோரிடமும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அந்த ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
