மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், கல்லூரி நுழைவாயிலில் உள்ள இரும்பு கிரில்லில் மாணவி ஒருவரின் கால் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சத்தர்பூர் மாவட்டம் நௌகாவ் பகுதியில் உள்ள பாபு பட்டயக் கல்லூரியில் (Bapu Degree College) இந்தச் சம்பவம் திங்கள்கிழமை நிகழ்ந்தது. தேர்வு எழுதுவதற்காக அந்த மாணவி கல்லூரிக்கு வந்துள்ளார். கல்லூரி வளாகத்திற்குள் நுழையும்போது, கால்நடைகள் உள்ளே வராமல் தடுப்பதற்காக நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த ‘கேட்டில் கார்டு’ (Cattle Guard) எனப்படும் இரும்பு குழாய்களுக்கு இடையே மாணவியின் கால் எதிர்பாராத விதமாக வழுக்கிச் சிக்கிக்கொண்டது.
இரும்பு குழாய்களுக்கு இடையே மாணவியின் கால் பலமாகச் சிக்கியதால், அவரால் காலை வெளியே எடுக்க முடியாமல் வலியால் துடித்தார். இதைக் கண்ட சக மாணவர்களும், பொதுமக்களும் உடனடியாக உதவ முன்வந்தனர்.
#WATCH | College Student’s Leg Gets Stuck In Iron Grill At A Chhatarpur College Gate; Rescued By Locals After Hour-Long Effort #MPnews #MadhyaPradesh pic.twitter.com/H6dE9jAfsF
— Free Press Madhya Pradesh (@FreePressMP) February 16, 2026
முதலில் கைகளால் இழுத்து மீட்க முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை.
பின்னர், உராய்வைக் குறைக்க காலில் தண்ணீர் ஊற்றப்பட்டது. அதிலும் முன்னேற்றம் இல்லாததால், எண்ணெய் தடவப்பட்டு காலை வழுக்கி எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, சக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியால் மாணவியின் கால் பத்திரமாக மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் போது கல்லூரி நிர்வாகம் உரிய நேரத்தில் உதவவில்லை என்றும், மீட்பு கருவிகளோ அல்லது முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகளோ செய்யப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விலங்குகளைத் தடுக்க வைக்கப்பட்ட இரும்பு கிரில் இப்போது மாணவர்களின் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடிந்துள்ளது. நீண்ட நேரம் கால் சிக்கியிருந்தால் எலும்பு முறிவு கூட ஏற்பட்டிருக்கலாம்” என மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், கல்லூரி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன
