அண்மைக்காலமாக கார் மற்றும் இருசக்கர வாகன வாடகை சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சிலர், ஓட்டுநர்களிடம் காட்டும் அநாகரிகமான நடத்தைகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக பெங்களூரு மற்றும் டெல்லி போன்ற பெருநகரங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது ஓட்டுநர்களிடையே அச்சத்தையும் முகம் சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜோடி ஒன்று, பொது இடம் என்பதை மறந்து மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டது பதிவாகியுள்ளது. காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், பின்னால் நடப்பவற்றைப் பார்த்து நிலைகுலைந்து போயுள்ளார். “வாடகை காரை ஓயோ விடுதி அறை என நினைத்துக்கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது” என அந்த ஓட்டுநர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், இஸ்கான் (ISKCON) கோவிலுக்குச் செல்ல காரை முன்பதிவு செய்த பெண் ஒருவர், ஓட்டுநருக்குச் செயலி வாயிலாக அனுப்பிய குறுஞ்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ‘ஹலோ ப்ரோ’ எனத் தொடங்கிய அந்தப் பெண், அடுத்ததாக “பாலியல் உறவுக்குச் சம்மதமா?” எனக் கேட்டு ஓட்டுநரை அதிர வைத்துள்ளார். மேலும், ஓட்டுநரின் வாட்ஸ்அப் எண்ணைக் கேட்டு அவர் நச்சரித்த நிலையில், ஓட்டுநர் அதனைத் திட்டவட்டமாக மறுத்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
View this post on Instagram
இது குறித்துப் பேசிய டெல்லியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், “முன்பெல்லாம் ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மட்டுமே இத்தகைய சங்கடங்கள் வந்தன. இப்போது கார் ஓட்டுநர்களுக்கும் இது அன்றாட நிகழ்வாகிவிட்டது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வீடியோக்கள் பல நேரங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படுபவையா அல்லது உண்மையானவையா என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும், கார் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் இந்த ‘மன ரீதியான சித்திரவதை’ குறித்துக் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
