சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளங்களை நாம் சரியாகக் கையாளாததே இந்தத் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய கடைசி 3 நாட்களில்தான் நாம் வெற்றியை இழந்துள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த சமூக வலைதள உத்திகள் மூலம் வெற்றி பெற்றதோ, அதே உத்தியை நாமும் கையில் எடுத்து வெல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை அதிமுகவினர் உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்ற நவீன ஊடகங்கள் மூலம் தற்போதைய அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தவெகவின் இந்த வெற்றி தற்காலிகமானது, அது நிலையானது அல்ல என்று விமர்சித்த இபிஎஸ், தமிழ்நாட்டில் அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். தவெக நமக்கு ஒருபோதும் எதிரி அல்ல என்றும், திமுகதான் அதிமுகவின் உண்மையான எதிரி என்றும் அவர் தனது உரையில் அதிரடியாகத் தெளிவுபடுத்தினார்.
