குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தமிழக அரசின் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “குற்றச் சம்பவங்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து ஆட்சிக் காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முன்பும் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு இந்தச் சட்டத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்” என்றார்.
மேலும், இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்கு நீதிமன்றங்கள் எக்காரணம் கொண்டும் ஜாமீன் (பிணை) வழங்கக் கூடாது என்று குறிப்பிட்ட வைகோ, “ஆயுள் முழுவதும் சிறைதான் என்ற நிலை உருவானால் மட்டுமே, இந்த மிருகத்தனமான மனிதர்களுக்குச் சட்டத்தின் மீது கொஞ்சமாவது பயம் ஏற்படும்” என்று ஆதங்கம் தெரிவித்தார்.
“உள்ளாட்சித் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ (தவெக) மதிமுக கூட்டணி வைக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், நாங்கள் இன்னும் கூட்டணி குறித்து யோசிக்கவே இல்லை. கடந்த தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்கு எங்களால் எவ்வளவு விசுவாசமாக உழைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் கடுமையாக வேலை செய்துள்ளோம். சாத்தூர் தொகுதியில் கூட தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு திமுகவை வெற்றி பெறச் செய்தோம்.
“திமுக கூட்டணியில் இருந்த பலர் தற்போது ஆட்சியில் கூடப் பங்கு பெற்றுவிட்டனர். ஆனால் நாங்கள் அப்படி எதையும் எதிர்பார்க்கவில்லை, எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் எங்களைப் பற்றிப் பலவாறாக விமரிசித்து வருகிறார்கள். எதற்கும் நாங்கள் அவசரப்படப் போவதில்லை.
வருகிற 27-ஆம் தேதி எங்களது கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நிர்வாகிகளின் அனைத்து கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே, இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்று வைகோ தெரிவித்தார்.
