ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் உள்ள கைரோ பகுதியில், தனது மாமியின் வீட்டில் தங்கியிருந்த 9 வயது சிறுமி மீது அதே மாமியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், தாய் வேலை நிமித்தமாக சென்னையில் வசிப்பதாலும், அந்தச் சிறுமி தனது மாமியிடம் வசித்து வந்தாள்.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். கடந்த புதன்கிழமை மீண்டும் அவர் செய்த கொடூரமான செயலால் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த குற்றவாளி, சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

எனினும், தகவலறிந்த காவல்துறை அவரை உடனடியாகக் கைது செய்தது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் மாமியே தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.