இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17, புதன்கிழமை) கொண்டாடுகிறார். பா.ஜனதா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆளும் பிரதமராகவும், உலக அரங்கில் இந்தியாவின் குரலை உயர்த்திய தலைவராகவும் மோடி உயர்ந்துள்ள நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு சமூகநல திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின்  அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடி ஒரு மகத்தான பணியை செய்து வருகிறார். ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா அளிக்கும் ஆதரவுக்கு நன்றி” என டிரம்ப் தெரிவித்ததோடு, “நான் எப்போதும் மோடியுடன் நண்பராகவே இருப்பேன்” என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்புக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டுறவை உயர்த்த முழுமையான உறுதிபோடு செயல்படுகிறேன்” என தெரிவித்தார். வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் இருநாடுகளிடையே நிலவி வந்த பதற்ற சூழ்நிலையில், டிரம்பின் இந்த நட்பு சைகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.