தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீமன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

தனது வீடியோ பதிவில் பேசியுள்ள ஸ்ரீமன், “இன்னும் இரண்டே நாட்கள்தான் உள்ளன. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஒரு தேர்தலைச் சந்திப்பது என்பது எவ்வளவு கஷ்டம், எத்தனை எதிர்ப்புகள், என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது என்பது நமக்குத் தெரியும்” என்று விஜய்யின் அரசியல் பயணத்தின் சிரமங்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “நண்பா, நீ இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை மற்றும் பிரார்த்தனை. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் நான் யாருக்கு வாக்களித்தேன் என்பது அந்தந்தக் கட்சியினருக்கே தெரியும். ஆனால், இந்த முறை என் நண்பன் (விஜய்) வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், வரும் திங்கட்கிழமை (மே 4, 2026) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்தித்துள்ள விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எவ்வளவு இடங்களைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் நீண்ட கால நண்பரான ஸ்ரீமனின் இந்தப் பதிவு, த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.