நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலில் உள்ள நிலையில், அந்தப் படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், தணிக்கைத் துறையிடம் இருந்து சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது வரை இப்படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வில் உள்ளது.
படம் இன்னும் திரையரங்கிற்கே வராத நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனமான ‘கே.வி.என். புரொடக்ஷன்ஸ்’, உடனடியாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையில் புகாரளித்தது.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணையின் நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டது. மேலும் ஒருபுறம் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் படக்குழுவினருக்கு, மறுபுறம் இணையதளக் கசிவு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
