சென்னை வடபழனியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மூத்த நடிகர் ராதாரவி, சினிமா மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தனது பாணியில் அதிரடியாகவும் நகைச்சுவையாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தனது ஆரம்பகால சினிமா அனுபவங்களை நினைவுகூர்ந்த ராதாரவி, “நானும் நடிகை அம்பிகாவும் இணைந்து நடித்த ‘பேய் வீடு’, ‘நாகம்’ போன்ற படங்கள் அந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த என்னுடன், அந்த காலத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே தைரியமான நடிகை அம்பிகா மட்டும்தான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது குறித்துப் பேசிய அவர், “சினிமாவில் இருந்த ஒரு சகோதரர் இன்று பெரிய அரசியல் இயக்கங்களுக்கு எல்லாம் போட்டியாகத் துணிச்சலுடன் நிற்கிறார். சினிமாவில் இருந்தால் மட்டுமே மக்கள் கூட்டம் சேர்ந்துவிடும் என்று யாராவது நினைத்தால் அது தவறு. பேசும் விஷயத்தில் அர்த்தம் இருந்தால்தான் கூட்டம் சேரும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.
தனது பேச்சின் இறுதியில் அரசியலில் நடக்கும் திடீர் மாற்றங்கள் குறித்து கிண்டலாகப் பேசிய ராதாரவி, “சினிமா மற்றும் அரசியலில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போது நான் உங்கள் முன்னால் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த மேடையை விட்டு நான் கீழே இறங்கும் போது, திடீரென நானே ஒரு தலைவன் ஆகிவிடுவேன். ஏன், எதுக்கு என்று நீங்கள் கேட்கவே முடியாது. அப்படிப்பட்ட சூழல்தான் இப்போது நிலவுகிறது என்று கலகலப்பாகப் பேசி விடைபெற்றார். மேலும் அரசியல் களத்தில் புதிய வரவுகள் அதிகரித்துள்ள நிலையில், ராதாரவியின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
