உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், தனது நண்பர்கள் மூவரைக் கொடூரமாகக் கொலை செய்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், ரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட போது, அவர் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இதனால் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துப்பாக்கிச் சண்டையின் போது இரண்டு காவலர்களும் காயமடைந்தனர், அவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அற்ப காரணத்திற்காக மூன்று உயிர்களைப் பறித்த குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.