உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனது கால்களை அமுக்க மறுத்த தலித் இளைஞரை சாதி ஆதிக்க வெறி காரணமாக ஒரு கும்பல் கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் அஹிர்வார் என்ற இளைஞர், தனது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சாதி ஆதிக்கத்தைச் சேர்ந்த நபர்கள், மனோஜை தங்கள் கால்களை அமுக்கிவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மனோஜ் அஹிர்வார் கடுமையாக மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அவரை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டி, பெல்ட்கள் மற்றும் கட்டைகளால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத் தொடங்கியது.

அறைக்குள் வைத்து நொடிகள் கூட இடைவெளியின்றி நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், பலத்த காயமடைந்த மனோஜ் அஹிர்வார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், மனோஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலித் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் கொலைப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.