உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள குகுந்து காவல் நிலைய எல்லையில் கொடூரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தனது நண்பருடன் ஒரே அறையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், அந்த நண்பரின்மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை கத்தியால் தாக்கியதாகவும், அவர் கடுமையாக காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீசார் கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஒரு இசைக்குழுவில் நடனக் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். குடும்ப தகராறின் காரணமாக அவர் தனது 6 வயது மகளுடன் தனியே ஒரு அறையில் வாடகைக்கு இருந்துள்ளார். அதே அறையில் ராம்பாபு (25) என்ற கூலித் தொழிலாளியும் தங்கியிருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

செவ்வாய்க்கிழமை இரவு இரவு உணவுக்குப் பிறகு தூங்கச் சென்ற இருவரில், ராம்பாபு சிறுமியை வன்கொடுமை செய்ததாக போலீஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை ஆத்திரத்தில் ராம்பாபுவை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் கூறுகையில், ராம்பாபு மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில்போக்ஸோ  சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.