வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய பேட்டியைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் நண்பர்கள் என்று முதல்வர் கூறியதைச் சுட்டிக்காட்டிய விஜய், “அப்படியென்றால் கரூர் விவகாரத்தில் ஏன் என் மீது வீண் பழியைத் தூக்கிப் போட்டீர்கள்?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார். தனக்கும் அந்தச் சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லாதபோது, முதல்வர் தனது பெயரைக் குறிப்பிட்டதை விஜய் வன்மையாகக் கண்டித்தார்.

​தொடர்ந்து பேசிய அவர், “உங்களுக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால் இப்படிப் பேசியிருப்பீர்களா? எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் என் மீது பொய்களை அள்ளி வீசுகிறீர்கள்” என்று ஆவேசமாகக் கூறினார். ஸ்டாலின் தன்னை நண்பர் என்று சொல்வது வெறும் அரசியல் நாடகம் என்றும், உண்மையான நட்பு இருந்தால் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்க மாட்டார் என்றும் விஜய் தெரிவித்தார். விஜய்யின் இந்தத் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான சாடல் தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.