உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சதத்கஞ்ச் காவல் நிலைய நுழைவாயிலுக்கு வெளியே ஒரு ஆண், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. பரபரப்பான சாலையில் நடந்த இந்த நிகழ்வின் போது, அங்கு எந்த காவல்துறையினரும் இல்லை. இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் தலையிட்டு இருவரையும் பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வைரலான காணொளியில், ஒரு பெண் தரையில் விழுந்த நிலையில், அருகில் இருந்த ஆண் ஒருவர் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதையும், அவரது தலைமுடியைப் பிடித்து இழுப்பதையும் காணலாம். சுமார் நான்கு வினாடிகள் கழித்து, வெள்ளை டி-ஷர்ட் மற்றும் நீல ஜீன்ஸ் அணிந்த ஒரு நபர் சம்பவ இடத்துக்கு வந்து, தாக்குதலை நிறுத்த முயற்சிக்கிறார். அவர் குற்றம் சாட்டப்பட்ட நபரை அந்தப் பெண்ணிடமிருந்து விலக்க முயன்றபோதும், தாக்குதல் நடத்திய ஆண் எதிர்த்து நிற்கிறார். இறுதியில், அங்கு இருந்த மக்கள் தலையிட்ட பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.

 

 

பின்னர் தலையிட்டவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். வைரலாகிய காட்சிகளுக்குப் பின்னர், லக்னோ காவல்துறை X  தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “இந்த சம்பவம் சதத்கஞ்ச் கோட்வாலி காவல் நிலையம் முன்பாகவே நடந்தது. சம்பந்தப்பட்டவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு, உரிய விசாரணை மற்றும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.

மேலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், பின்னணி போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த தாக்குதல் ஒரு போலீஸ் நிலைய நுழைவாயிலின் முன்பாக நடந்தது என்பதால், அங்கு காவல்துறை கண்காணிப்பு இல்லாதது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.