கடந்த சில நாள்களாக காவல்துறையினரின் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் வழக்கமான வாகன சோதனையின் போது ஒரு பெண்ணை போக்குவரத்து காவலர் தாக்கியதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
வைரலான காணொளியில், காக்கி சீருடை அணிந்த போக்குவரத்து காவலர் ஒருவர், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை நிறுத்தி சோதனை நடத்துவது பதிவாகியுள்ளது. அப்போது அவர் தனது அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த அடையாள அட்டை தவறுதலாக கையில் இருந்து நழுவி தரையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காவலர், அந்தப் பெண்ணை நோக்கி கத்தி, அவரைப் பிடித்து திறமுகத்தில் பலமுறை அடித்ததாகக் காணொளியில் பதிவாகியுள்ளது.
Seeing the Ahmedabad police behave like this with women makes one’s blood boil!
A Gujarati sister asks a police officer for his ID card. The ID slips from her hand and falls on the road – and this becomes her “crime”! Then this khaki-clad goon slaps her and draws blood!
What is… pic.twitter.com/hrTJKYbo10— Jignesh Mevani (@jigneshmevani80) December 20, 2025
சம்பவ இடத்தில் மற்ற காவல்துறையினரும், பொதுமக்களும் இருந்ததாகவும், சிலர் இருவரையும் பிரிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், காவலர் தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த தாக்குதலில் அந்தப் பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் மீது புகார் அளிக்க சென்றதாகவும், ஆனால் அங்கு இருந்த துணை ஆய்வாளர் (பிஎஸ்ஐ) தன்னை மிரட்டியதாகவும், புகாரைப் பதிவு செய்ய மறுத்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் எம்.என். பரேவாடா கூறுகையில்,
“இந்த விவகாரம் போக்குவரத்து சோதனை தொடர்பான தகராறாக இருப்பதால், அந்தப் பெண்ணை சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
