சர்வதேச கடல் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஓமன் நாட்டின் மசிரா கடற்பகுதிக்கு அருகே சென்ற ‘எம்டி மரிவெக்ஸ்’ என்ற எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்க கடற்படை சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, ஈரானிய துறைமுகத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறி, அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போரிலிருந்து புறப்பட்ட எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட் போர் விமானங்கள் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளன.
மேலும் அமெரிக்க ராணுவத்தின் அடுத்தடுத்த எச்சரிக்கைகளையும் மீறி, சிக்னல் கருவிகளை அணைத்துவிட்டு ரகசியமாகச் செல்ல முயன்றதால், அந்த கப்பலின் எஞ்சின் அறையை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைகளை வீசியுள்ளது. இதனால் கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியதால், உள்ளே இருந்த மாலுமிகள் அலறியடித்துக் கொண்டு மரண பயத்தில் தவித்தனர்.
இருப்பினும், இந்த கோர விபத்தில் மிகப்பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் நிம்மதியடையச் செய்துள்ளது. தாக்குதலுக்குள்ளான அந்த கப்பலில் இருந்த 24 மாலுமிகளும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் தீப்பற்றியதும், அவசர கால உயிர் காக்கும் படகுகளும் சேதமடைந்ததால், மாலுமிகள் அனுப்பிய ‘SOS’ மரண ஓல சிக்னலை மும்பை கடல்சார் மீட்பு மையம் கண்டறிந்தது.
உடனே இந்திய வெளியுறவுத்துறை மற்றும் ஓமன் நாட்டின் மீட்புக்குழுவினர் இணைந்து அதிரடி ஆப்பரேஷனில் இறங்கினர். ஓமன் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீப்பற்றி எரிந்த கப்பலுக்கு மேலே உயிரைப் பணயம் வைத்து பறந்து, காற்றில் தொங்கியபடி 24 இந்திய மாலுமிகளையும் ஒற்றைக் காயம்கூட இல்லாமல் பத்திரமாக மீட்டெடுத்தனர். அதிர்ஷ்டவசமாக கப்பலில் எண்ணெய் ஏதும் இல்லாததால் பெரும் வெடிவிபத்து தப்பியது.
