நாடு முழுவதும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு தாயின் துணிச்சலும் அவருக்கு உதவிய ஒரு கார் ஓட்டுநரின் வேகமும் சேர்ந்து ஒரு குழந்தையை மீட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் தனது கூட்டாளியுடன் பைக்கில் வந்து ஒரு குழந்தையை லாவகமாகத் தூக்கிக்கொண்டு தப்ப முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் சத்தமிட்டபடி ஓட, அந்த வழியாக காரில் வந்த ஒருவர் உடனடியாக அந்தத் தாயை காரில் ஏற்றிக்கொண்டு திருடர்களை விரட்டிச் சென்றார். காரின் முன் இருக்கையில் இருந்த நபர் இந்த மொத்த ‘சேஸிங்’ காட்சியையும் தனது மொபைலில் படம்பிடித்துள்ளார்.

​காருக்கு இணையாக பைக்கில் வேகமெடுத்த கடத்தல்காரர்களை விரட்டிய அந்த நபர், அவர்களை வழிமறித்து நிறுத்தினார். திருடி கையில் சிக்கிய பிறகும், “இந்தக் குழந்தை என்னுடையது” என்று அந்தப் பெண் கூசாமல் பொய் சொன்னது பார்ப்பவர்களை அதிர வைத்தது. ஆனால், குழந்தையின் உண்மையான தாய் அந்தப் பெண்ணிடம் இருந்து தனது குழந்தையை ஆக்ரோஷமாக மீட்டுக்கொண்டார். சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த இந்தத் திக் திக் நிமிடங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த வீடியோ குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.