ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகங்களான ‘வேர்ல்டு டிரேட் பார்க்’ மற்றும் ‘கௌரவ் டவர்’ அமைந்துள்ள மால்வியா நகர் பகுதியில், இளம் பெண் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது நண்பர்களுடன் ஜெய்ப்பூருக்குச் சுற்றுலா வந்திருந்தபோது ஜூன் 9-ஆம் தேதி காலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் பயணித்த வாடகை காரில் இருந்து கௌரவ் டவர் அருகே இறங்கிய போது, அவருக்கும் கார் ஓட்டுநருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அந்தப் பெண், ஆடைகளின்றி ஓட்டுநரைத் தாக்கியதோடு, காரின் கண்ணாடிகளையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன ஓட்டுநர், காரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் நோக்கி அந்தப் பெண் அநாகரீகமான முறையில் சத்தமிட்டபடி, சாலையோரம் கிடந்த செங்கற்களை எடுத்து அவர்கள் மீது வீசி எறிந்துள்ளார். இதனால் அந்தப் பரபரப்பான வணிகப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் சிதறி ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்தி,  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுத்த நாள் போதை தெளிந்த பிறகு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண், தனக்கு எதிராக யாரும் தவறாக நடக்கவில்லை என்றும், தனக்கு மருத்துவப் பரிசோதனை தேவையில்லை என்றும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். ஓட்டுநரோ அல்லது பொதுமக்களோ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் எதுவும் அளிக்காததால், ஜூன் 10 அன்று அவர் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பாக வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.