நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்படாத விவகாரத்தில், திரையில் வரும் ஜனநாயகனுக்காகக் குரல் கொடுக்கும் முதல்வர், தரையில் இருக்கும் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கைத் துறையின் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தணிக்கைத் துறையின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தணிக்கைத் துறை செயல்படுவதாகக் கண்டித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சீமான் கூறியதாவது: “தணிக்கைத் துறை என்பது தற்போது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போலவே செயல்படுகிறது. நான் நடித்த ‘அடங்காதே’ படத்தில் நான் பேசிய பல முக்கியமான வசனங்களை நீக்கிவிட்டார்கள். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தரி போட்டு அந்தப் படத்தையே சிதைத்துவிட்டார்கள். அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை.
இப்போது திரையில் வரும் ‘ஜன நாயகன்’ படத்தைப் பற்றிப் பேசி வருகிறீர்கள். ஆனால், இதோ தரையில் ஒரு ‘ஜனநாயகன்’ (சீமான்) இருக்கிறேன், என்னை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை? ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் உடனடியாகக் குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை?”
சினிமாப் பட வெளியீட்டுச் சிக்கலில் அரசு காட்டும் வேகத்தை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது ஒருபுறமிருக்க, இது தொடர்பான அரசியல் விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.
