தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு விரிவான பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க இந்த முறை கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் 108 தொகுதிகள் அதிக செலவு செய்யப்படும் தொகுதிகளாகக் கண்டறியப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 151 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு முகமைகளின் ஆலோசனையின்படி, அதிக செலவு செய்யப்பட வாய்ப்புள்ள தொகுதிகள் கண்டறியப்பட்டு இந்தப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தால் அத்தியாவசியப் பணிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 12 துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். இதில் பத்திரிகையாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது துறையின் ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் (Nodal Officer) சான்றொப்பம் பெற்று, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் (RO) விண்ணப்பித்து தபால் வாக்கினைப் பதிவு செய்யலாம்.

மேலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஒரு நடிகர் கட்சித் தலைவராகவும், வேட்பாளராகவும் இருக்கும் பட்சத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அவரது படம் வெளியாவதற்கு ஆணையத்தின் அனுமதி தேவையா என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுப் பதிலளிக்கப்படும். இது ஒரு புதிய வகைச் சூழல் என்பதால் ஆணையத்தின் முடிவே இறுதியானது” என்றார்.