கர்நாடக மாநிலம் ஹாசனில், பிரபல கன்னட நடிகர் யாஷின் தாயார் புஷ்பா தொடர்பான நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டை ஒட்டியுள்ள சுமார் 1,500 சதுர அடி அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் கட்டியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆக்கிரமிப்பை உறுதி செய்த நீதிமன்றம் அந்தச் சுவரை இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், அதிகாரிகள் முன்னிலையில் அந்தச் சுற்றுச் சுவர் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
தற்போது நடிகர் யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ (Toxic) படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயந்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. ஒருபுறம் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் விண்ணை முட்டியுள்ள நிலையில், அவரது தாயார் தொடர்பான இந்த நில விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
