மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், இறந்த மகனின் அரசு வேலை மற்றும் பணத்திற்காக மருமகளை மாமியாரே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் பகுதியைச் சேர்ந்த லதாபாய் கங்குர்டே (60) என்பவரின் மகன் விலாஸ் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, மகனின் பணிக்கால பணமான சுமார் 10 லட்சம் ரூபாய் மற்றும் கருணை அடிப்படையிலான ரயில்வே வேலை ஆகியவை மருமகள் ரூபாலிக்கு (35) கிடைக்க இருந்தது. ஆனால், அந்தப் பணத்தை தன்னிடமே கொடுக்க வேண்டும் என்றும், அரசு வேலை தனது பேரனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் லதாபாய் மருமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பணத்திற்காக ஆசைப்பட்ட லதாபாய், தனது நண்பர் ஜெகதீஷ் என்பவருடன் இணைந்து மருமகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, புத்தாண்டு அன்று இரவு ரூபாலியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை ஒரு பாலத்தின் அடியில் வீசியுள்ளனர்.
பின்னர் எதுவும் தெரியாதது போல் மருமகளைக் காணவில்லை என்று லதாபாயே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் லதாபாய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது மாமியார் மற்றும் அவருக்கு உதவிய நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
