அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. இந்தியா 255 ரன்கள் குவித்து, நியூசிலாந்தை 159 ரன்களில் சுருட்டி சாம்பியன் பட்டம் வென்றது. சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இந்தியா வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் அதே வேளையில், சமூக வலைதளங்களில் நியூசிலாந்து அணியின் விளையாட்டுப் பண்பைப் (Sportsmanship) போற்றும் வீடியோ ஒன்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

​அந்த வீடியோவில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது, காயம் காரணமாக நடக்க முடியாமல் தவித்த எதிரணி வீரர் கிர்க் மெக்கென்சியை, நியூசிலாந்து வீரர்கள் இருவர் தங்கள் கைகளாலேயே தூக்கிச் சென்று மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றனர். இது ஒரு பழைய வீடியோ என்றாலும், இப்போது நியூசிலாந்து அணி தோற்றிருக்கும் நிலையில், அவர்களின் கண்ணியமான விளையாட்டைப் பாராட்டும் விதமாக ரசிகர்கள் இதனை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். “கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதற்கு நியூசிலாந்து வீரர்களே சாட்சி” என நெட்டிசன்கள் இதயங்களைக் குவித்து வருகின்றனர்.