கனடாவில் வசித்து வரும் இந்தியத் தம்பதியினருக்கு மராட்டிய மாநில நீதிமன்றம் ஒன்று காணொலிக் காட்சி வாயிலாக விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பணி நிமித்தமாக கனடாவில் குடியேறிய இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வசித்து வந்தனர். இருவரும் பரஸ்பரம் பிரிந்து வாழ முடிவு செய்த நிலையில், தானே குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதனால் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருவதால், நேரில் ஆஜராவதில் இருந்த நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இரு தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இணைந்து வாழ விரும்பாததால், சுமார் 6 மாத கால காத்திருப்புக்குப் பிறகு நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

மேலும் பராமரிப்புத் தொகை மற்றும் எதிர்காலத் தேவைகள் குறித்து தம்பதியினர் சுமூகமாக பேசி முடிவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஆர்.எஸ்.பகரே, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி இந்தத் தீர்ப்பை வழங்கினார். நவீன காலத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இத்தகைய தொழில்நுட்பத் தீர்வுகள் சட்ட ரீதியான சிக்கல்களை எளிதாக்குவதாக இது பார்க்கப்படுகிறது.