தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இது தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்குப் பெரிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி முறை ஒத்துவராது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதே வேளையில் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். முதல்வரின் இந்தக் கருத்துக்கு ஏற்கனவே மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் எதிர்வினையாற்றி வந்த நிலையில், தற்போது பிரவீன் சக்கரவர்த்தியும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு என்பது தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தனித்துவம் என்ற போலி பிம்பத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட், கேரளா, பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கூட்டணி அரசு அமைவதில் தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல என்றும், தமிழக காங்கிரஸின் முன்னேற்றத்திற்கு இதுவே சரியான வழி என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.