இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி (72) இன்று (பிப்ரவரி 12) காலமானார். 1980 மற்றும் 90-களில் தொலைக்காட்சியில் செய்தி என்றாலே நினைவுக்கு வரும் ஒரு சில முகங்களில் சரளா மகேஸ்வரியின் முகம் மிகவும் முக்கியமானது. எவ்விதப் பதற்றமும் இல்லாத அவரது வாசிப்பு முறையும், தெளிவான ஹிந்தி உச்சரிப்பும் அவரை நாடு முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆக்கின. 1976-ல் தொடங்கிய இவரது பயணம் 2005 வரை சுமார் 30 ஆண்டுகள் தூர்தர்ஷனுடன் நீடித்தது.

​1982-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது இந்தியா கருப்பு வெள்ளையில் இருந்து வண்ணத் தொலைக்காட்சிக்கு மாறிய வரலாற்றுத் தருணத்தில் இவரின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தியை தேசத்திற்கே அறிவித்த கனத்த குரல் இவருடையதுதான். அன்னை தெரசாவின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகளைத் தனது கம்பீரமான குரலால் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். இவரது மறைவு செய்தித் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லி நிகம் போத் காட்டில் இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.