மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பாதாள சாக்கடை சுத்திகரிப்புப் பணியின் போது, சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விஷவாயு தாக்கி தொட்டிக்குள்ளேயே சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் போது மீட்புப் பணிகளுக்குத் தேவையான முறையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாதது அப்பகுதி மக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்படவில்லை எனவும், போதிய கருவிகள் இல்லாததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் மக்கள், அதிகாரிகளின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View this post on Instagram
“>
இச்சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினரிடம் முறையான ஏணிகளோ அல்லது பாதுகாப்பு கவசங்களோ இல்லாத நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்களே முன்வந்து சாதாரண கயிறுகளைப் பயன்படுத்தி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரின் உடல்களையும் வெளியே மீட்டெடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள காலத்திலும், உயிருக்கு ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களைக் கூட வழங்காத ‘திறமையற்ற’ நிர்வாகத்தின் செயல்பாடுகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
